Saturday, July 12, 2008

தமிழக மீனவர்கள் மீண்டும் சுட்டுக் கொலை! - என்ன தான் தீர்வு?

இதோ அடுத்து ஒரு இதயம் கனக்கச் செய்யும் செய்தியைக் கேட்க நேர்கிறது. கடலூரைச் சேர்ந்த இரண்டு மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்கள். வழக்கம் போல தமிழக அரசு இழப்பீடு என்ற பெயரில் பணத்தைக் கொடுத்து ஆறுதல் மட்டுமே சொல்லியிருக்கிறது.

தொடரும் இந்தக் கொலைகளுக்கு யார் காரணம்? தமிழக அரசின் மெத்தனப் போக்கே காரணம் என்று எல்லோரும் அறிவோம். மத்திய அரசில் மிக முக்கியமான நிலையில் இருக்கும் திமுக தமிழக மீனவர்கள் கொல்லப்படுவது குறித்து கொஞ்சமும் மனிதாபிமானம் இல்லாமல் குறைந்தபட்சம் பிரதமரைச் சந்தித்து தக்க நடவடிக்கை எடுக்கக் கூட முயலாதது தமிழக மீனவர்கள்/மக்கள் அனைவருக்கும் மிகுந்த வேதனையை ஏற்படுத்தியிருக்கிறது.

எதிர்க்கட்சியான அதிமுக வழக்கம்போல முதல்வரை இந்த விசயத்தில் குறை சொல்லிவிட்டு விட்டுவிட்டது. இராமேஸ்வரத்தில் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஏற்கனவே ஈடுபட்டிருக்கிறார்கள். அதிமுகவிற்கு ஆளுங்கட்சியை எதிர்த்துப் போராடி மக்கள் ஆதரவைத் திரட்ட இதை விட நல்ல சமயம் கிடையாது. மாவட்டம் தோறும் போராட்டம், ஏன் ஜெயலலிதாவே தலைமையேற்று ஆர்ப்பாட்டம் ஊர்வலம் என்று நடத்தினாலாவாது திமுக பயந்துபோய் எதாவது நடவடிக்கை எடுக்க முயலும். ஆனால் அக்கட்சி இதுபோன்ற வாய்ப்புகளையெல்லாம் விட்டு விட்டு வெறும் அறிக்கைகளை மட்டும் விட்டு 'தேர்தலுக்கு இன்னும் நாளிருக்கிறதே' என்ற மனநிலையில் இருப்பது போல தெரிகிறது.

அரசியல்வாதிகளே! மீனவர்கள் என்ன பணம் காசா கேட்கிறார்கள் உங்களிடமிருந்து? தங்களின் உயிருக்குப் பாதுகாப்பைக் கேட்டுக் கதறுகிறார்கள். இன்னும் உங்கள் இரக்கமற்ற இதயங்கள் இப்படியேதான் இருக்குமா? அவர்களுக்கு ஒரு தார்மீக ஆதரவைக் கூடத் தெரிவிக்காத நீங்கள் தமிழன் என்று சொல்லிக் கொள்ளாதீர்கள்.

எரிச்சல்கள்:
1. எது எதற்கோ பிரதமர்/சோனியாவைச் சந்திக்கும் முதல்வர் இது போன்ற மிக முக்கியமான விடயங்களுக்கு மட்டும் கடிதம் எழுதினேன் என்று சொல்வது.

2. மீனவர்கள் நடத்தும் போராட்டங்களில் எந்த ஒரு கட்சியின் தலைவரும் நேரில் கலந்து கொள்ளாதது மற்றும் அவர்களுக்கு வெளிப்படையான ஆதரவு தெரிவிக்காதது.

எதிர்பார்ப்பு :
1. புதிதாக கட்சி ஆரம்பித்து மக்கள் ஆதரவை எதிர்பார்த்திருக்கும் விஜயகாந்த், சரத்குமார் போன்றோராவது மீனவர்களுக்கு ஆதரவாக இருப்பார்களா?