'கிடக்கிறது கிடக்கட்டும் கிழவியைத் தூக்கி மனையில் வை' என்ற பழமொழிதான் ஞாபகம் வருகிறது தற்போதைய காங்கிரஸ் அரசின் செயல்களைப் பார்த்தால். நாடே எரிபொருட்கள் விலை உயர்வு, பணவீக்கம், விலைவாசி உயர்வு என்று பற்றி எரிந்து கொண்டிருக்கும் போது மக்களிடம் இருந்து அதைத் திசை திருப்பும் விதமாக 'அமெரிக்காவுடன் அணுசக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்றியே தீருவோம்' என நம் பிரதமர் சூளூரைக்கிறார்.
அமெரிக்காவுக்கு இந்தியாவை வளைத்துப் போட இதைவிட நல்ல சந்தர்ப்பம் கிடைக்காது. எனவே தான் மன்மோகன் அரசு உயிருடன் இருப்பதற்குள் இந்த ஒப்பந்தத்தை நிறைவேற்றத் துடிக்கிறது. இந்த ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதற்காக பல்வேறு விதிமுறைகளை மீறியிருப்பதாகக் கூறப்படுகிறது. சாமானியனான நமக்கு அதெல்லாம் அவ்வளவு விரிவாகத் தெரியாது.
மக்களை நேரடியாகப் பாதிக்கும் பிரச்சினைகளின் போதெல்லாம் அறைக்கு உள்ளே ஆதரவு தெரிவித்து விட்டு வெளியே வந்து மக்கள் முன் வேசம் போடும் இடதுசாரிகளின் போக்கு வன்மையாகக் கண்டிக்கப்படவேண்டியது. ஆனால் இந்தமுறை விலைவாசி உயர்வைவிட என்னமோ அணுசக்தி ஒப்பந்தம்தான் மக்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் என்பது போல அரசுக்கான ஆதரவை விலக்கியிருப்பது அவர்கள் அமெரிக்க எதிர்ப்புக் கொள்கைக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுப்பதை தெள்ளத் தெளிவாகக் காட்டுகிறது.
இந்த எதிர்ப்பை எரிபொருட்கள் விலையேற்றத்தின் போதே செய்திருந்தால் மக்கள் உண்மையிலேயே 'நீங்க ரொம்ப நல்லவங்க'ன்னு நம்பியிருப்பார்கள். விலைவாசி உயர்வினால் எப்படியும் தேர்தல் வந்தால் காங்கிரஸ் மற்றும் கூட்டணிக்கட்சிகள் மரண அடி வாங்கப் போவது உறுதி.
காங்கிரசுக்கு எதிராகக் கிடைக்கப் போகும் ஒவ்வொரு வாக்கும் அதன் மக்கள் விரோதப் போக்கிற்கு மக்கள் கொடுக்கும் சவுக்கடி!
Subscribe to:
Post Comments (Atom)
1 comments:
test
Post a Comment